தமிழ் தேசியத்திற்கான இக்காலத் தேவை என்ன?
கோயம்புத்தூர், ஈரோடு மொத்தமும் நூற்பாலை வியாபாரத்தை நொடித்து போக செய்து; வட நாட்டவர் கைகளில் கைமாற்றிக் கொடுத்த பெருமைகளில் திராவிட கட்சிகளின் பங்களிப்பே அதிகம். தீபகற்பத் தமிழகத்தின் தென்கோடியை ஆர் எஸ் எஸ் இடம் அடங்கி தோற்று விவேகானந்த மண்டபம் அமைத்து இன்று கன்னியாகுமரியை ஹிந்துகளின்( பா.ஜ.க) அடையாளமாக மாற்றிய பெருமையும் திராவிட ஆட்சியாளர்களே சேரும்.
பாஜக கிட்டத்தட்ட கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் இரண்டையும் தனவசம் படுத்துவதில் வெற்றியை கண்டுவிட்டது அல்லது வெற்றியை பதிக்கிறது என கொள்வோம். ( கோவை பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில், கிடைக்க வில்லை எனில் இன்னும் மூர்க்கமாக அடுத்து இறங்கும். ) அடுத்த இலக்கு உறுதியாக திருநெல்வேலியையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடும். பாஜக வெற்றி பெறவில்லை எனிலும் யார் வெற்றி பெற்றாலும் அவர்களை தங்களின் கைப்பாவையாக மாற்றிக்கொள்ளும் தந்திரமும், பணபலமும், மதபலமும் பாஜகவிற்கு உண்டு.
இதற்கு அடுத்தப்படியாக தேனி மற்றும் சென்னையில் மத்திய சென்னைத் தொகுதியை கைப்பற்றத் துடிக்கும். ( தேனியை கடந்த முறை அதிமுக முகத்தோடு தன் வயப்படுத்தி விட்டாலும் தனிப்பெரும்பான்மையுடன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிற காலம் விரைவில் நடக்கலாம் ) இவ்விடங்களை கைப்பற்றி விட்டால் தீபகற்ப தமிழ்நாட்டின் எல்லைகள் முழுவதுமாக பாஜகவின் ஆளுகைக்குள் வந்துவிடுதாகிவிடும்.
இவற்றிற்கு பிறகான நகர்தல் மத்திய தமிழ்நிலமான திருச்சியும், அடுத்து மதுரையுமாக இவ்விரண்டு தொகுதிகளையும் ஆக்கிரமித்து கொண்டால் மிச்சமிருக்கிற இடங்களை அவர்கள் அடித்து பிடித்து ( பண ஜனநாயக வழியில் ) எடுத்து கொள்ளும் அதிகாரமும், வல்லமையும் பாஜகவிற்கு உண்டு. இது நாளையே நடந்துவிடுமா? என்றால் இல்லை. காலம் எடுத்து கொள்ளும் அது அடுத்த ஐந்து வருடங்கள் ஆகலாம் அல்லது அது அதற்கு மேலும் ஆகலாம். காரணம் மொத்தமாக ஒரு ஊரையே சூரையாடுவதற்கு கள்வர்களுக்கு காலமும் நேரமும் கூடுகிறவரைக் காத்திருப்பது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியத் துணைக்கண்டத்தின் மொத்த தேசிய நிலத்தையும் அழித்து ஒரு நிலமாக்கி ஒன்றாக ஆட்சி செய்ய கருவைத்திருக்கும் ஒரு கள்வர் கூட்டத்திற்கு காத்திருப்பு என்பது பல தலைமுறை ஆண்டுகள் கடந்து காத்திருந்தாலும் அதுவொரு பொருட்டு அல்ல என்றே அர்த்தப்படும்.
இந்த காத்திருப்பிற்குள், எவரெல்லாம் அந்த நிலத்தின் விழுமியங்கள், வரலாற்று கர்த்தாக்கள், மக்களின் ஏகோபித்த நம்பிக்கைகள், தழைக்கும் கோட்பாட்டு தத்துவங்கள், ஆன்மீக பண்பாடுகள், மரபின் தொடர்புள்ள பண்டிகைக் கொண்டாட்டங்கள் என்று பரந்து பட்டு இருக்கிறதோ; அவற்றையெல்லாம் அந்த நிலத்தை சார்ந்தவர்களையெல்லாம், அதன் நீட்சிகளையெல்லாம் திட்டமிட்டு அடக்கி வைத்தோ அல்லது சொல்லப்பட்டவைகளுக்குள் தங்களை கரைத்து கொண்டு எல்லாவற்றையும் அழித்து தங்களின் அடையாளமாக மாற்றிவிடுதோ இவர்களின் மிக முக்கிய திட்டங்களுள் ஒன்று.
இன்றைய காலச்சூழலில் இந்நிலத்தில் வேரூன்றி போயிருந்த எல்லா பிம்பங்களையும் நம்மைக் கொண்டே கீழ்த்தரமாக்கும் திட்டத்தின் பல படிகளில் ஒன்று தான் திராவிட கட்சிகளின் தரக்குறைவான நிலை.
பெரியார் என்ற பிம்பத்தை நாமே அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறோம்.
வள்ளலாரின் ஆன்மீக பண்பாட்டு வேலியை நம்மைக் கொண்டே பிய்த்து எறிய வைக்கிறார்கள்.
ஐம்பது ஆண்டுகாலமாக நிலைப்பெற்றிருந்த திராவிட, பெரியாரிய சித்தாந்தங்கள நீர்த்து போக செய்து, பிராமணிய சித்தாந்தத்தை அதனுள் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்திக் கொண்டார்கள்.
அரசியல் முகங்கள் எல்லாம் ஏதொரு ஜாதி அடையாளமாகவும், மத அடையாளமாகவும், இந்நிலத்திற்கு பொருந்தாத கோட்பாட்டை உடையவர்களாகவும் உருமாற்றம் பெற வைக்கிறார்கள்.
அதிகார வர்க்கமாக, உழைப்பை உறிஞ்சி கொழுக்கும் வர்க்கமாக இருக்கும் மேட்டிமைத்தனவாதிகளை தங்களின் அடிமைகளாக, தங்களின் ஏவல்களுக்கு பணிசெய்யும் கோரமிக்கக் கரங்களாக பயன்படுத்திக் கொள்வர்.
பண்டிகைகளை அந்நிலமக்களுடன் இணைந்து கொண்டாடி, கொண்டாடி இறுதியாக பண்டிகைகளின் மரபை கதைகளாலும், புராணங்களாலும் மாற்றியமைப்பார்கள்.
கனிம வளங்களை பேய்த்தனமாக சூரையாடுவது. ஒரு நிலம் எல்லா விதத்திலும் தன்னிறைவாக இருக்கும் பட்சத்தில் வேற்று நில ஆட்சி அதிகாரத்தின் தேவையென்பதும், அரசியல் நிலைப்பாட்டு தயவுதாட்சணியம் என்பதும் அந்நில மக்களை கட்டுப்படுத்துவதில்லை. அவர்கள் அந்த அதிகாரங்களை துச்சமாக்கி மீண்டு வெகுண்டு எழுவார்கள். அதை சீர்குலைக்கவே கனிவளங்களை இல்லாமலாக்குவதும், நிலத்தை மலட்டு தன்மையாக்குவதும், மழைக்கு காரணமான மலையை குடைந்து சாலை உருவாக்குவதும் உடைத்து கற்களாக்குவதும். நீரை உறிஞ்சி விற்பதுமென கனிமவளங்களை அழிப்பதும் கள்வர் கூட்டத்தின் திட்டங்களில் வளர்ச்சி என்ற பெயரில் சூரையாடுவதே.!
இதில் மிக கொடியது வரலாற்று விழுமியத் தடங்களை அழிப்பதும், அவ்வரலாற்று நாயகர்களின் வரலாறை பொதுவான தேசிய முகமாக்குதல் மற்றும் அந்நிலத்தில் பேசப்படும் மொழியை அழிப்பது அல்லது வேற்று மொழிக்கலப்பை உருவாக்குவது மூலமாக இலக்கிய மரபை பொய்யாக்குவதாகவும், வருங்காலத்திற்கு தொடர்பற்றதாகவும், இலக்கியப்போலி வரலாற்றை எழுத செய்வதுமென இவர்களின் தேசிய நிலத்தை அழித்து ஒருநிலமாக்கும் திட்டத்தின் கூறுகள் என்று நிறுவலாம்.
இப்போது தீபகற்ப தமிழ்நிலத்தில் என்னவிதமான தமிழின அழிப்பு நடக்கிறது என்றும், ஏன் தமிழ் தேசிய அரசியலை எல்லாருக்குமானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதும், ஏன் பெரியாரிய, திரவிட, பெளத்த கருதியலையும், தேசிய நிலங்களுக்கேற்ப மாற்றம் கொள்ளாத மார்கசியக் கோட்டுப்பட்டையும், பாஜக, காங்கிரஸ் ஆட்சியையும் எதிர்த்து செயல்பட வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளயேதுவாக இக்கட்டுரை இருக்கலாம். காரணம் இவ்வகைக் கருத்தியல், கோட்பாட்டுகளை கொண்டு தமிழ் நிலத்தில் நடக்க இருக்கும் அழிப்பை யவராலும் தடுக்கவியலாது என்பதே உண்மை.
இறுதியாக இப்போது நடக்கும் தமிழ் நிலத்தில் கட்டமைக்கப்பட கூடிய குழப்ப அரசியலின் பிண்ணனி என்பது பிற்காலத்தில் நடந்தேறயிருக்கும் இருக்கும் இன அழிப்பின் முன்னோட்டமே!.
நாம் பழங்கால தமிழரசர்களின் போர் வியூகங்களை நவீன தொழில்நுட்ப துணைகொண்டு திட்டமிட்டு நாற்புறமும் சூழ வரும் பேராபத்தை கருமேகத்தை தடுத்து நிறுத்தி, மக்களையும், நிலத்தையும், கனிம வளத்தையும், நீரை, காற்றையும் தற்காத்து இனிவரும் தலைமுறைக்கு கொடுப்பதும், இனிவரும் தலைமுறை யாரிடமும் அடிமையாகி மண்டியிடக் கூடாதென்பது என்பதும் நாம் எழுப்ப வேண்டிய பாதுகாப்பு அரண் என்பது
" தமிழ் தேசியம்".
S. Padmakumar